மார்ச் 30 ல் த.வெ.க. - நாம் தமிழர் 6ல் அ.தி.மு.க. மனு தாக்கல்

திருப்பூர்: சட்டசபை தேர்தலில், த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மார்ச் 30 ல் மனுத்தாக்கல் செய்கின்றனர்; அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சுபமுகூர்த்த நாளான, ஏப்., 6ம் தேதி மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.

வேட்புமனுத்தாக்கல் முதல் நாளான இன்று (30ம் தேதி) வளர்பிறை பிரதோஷ நாள் என்பதால், பெரும்பாலானோர், மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. கட்சி முடிவின்படி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள, 234 தொகுதிகளிலும் இன்று மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.



வரும் 2ம் தேதி வியாழக்கிழமை என்றாலும், பிரதமை திதி என்பதால், அந்நாளில் மனுத்தாக்கல் செய்வது வாய்ப்பு குறைவு. அடுத்து, 4ம் தேதியும், 6ம் தேதியும் நல்ல நாட்கள்; குறிப்பாக, 6ம் தேதி சதுர்த்தி திதி, மதியம், 1:48 மணி வரை இருக்கிறது; சுபமுகூர்த்த நாள் என்பதும் கூடுதல் சிறப்பு; முழுவதும் சித்தயோகம் என்பதாலும், கடைசி நாள் என்பதாலும், அந்நாளில் மனுத்தாக்கல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதாக, ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அனைத்து தொகுதிகளிலும், 6ம் தேதி தான், அ.தி.மு.க., வேட்பாளரின் மனுத்தாக்கல் நடக்கிறது. அதற்காக, வழக்கறிஞர் அணி உதவியுடன், வேட்பாளரின் சொத்து - கடன், வழக்கு விவரங்களை சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரம் தயாரிப்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement