சாலையோர உணவகங்களால் விபத்து அபாயம்

பள்ளிப்பட்டு:சாலையோர உணவங்களுக்கு வருவோர், சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

பள்ளிப்பட்டில் இருந்து ஆர்.கே.பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், நொச்சிலி கூட்டுசாலையில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, தேசிய சாலை பாதுகாப்பு ஆணையம், கடந்தாண்டு இந்த பகுதியை, ‛விபத்து முனையம்' என கண்டறிந்தது. அதை தொடர்ந்து இந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்க நெடுஞ்சாலை துறைக்கு பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில், இந்த கூட்டு சாலையில் மைய தடுப்பு அமைத்து, எச்சரிக்கை தானியங்கி சிக்னல்கள் பொருத்தப்பட்டன. கூடுதலாக வேகத்தடைகளும் அமைக்கப்பட்டன. மையத்தடுப்புக்காக சாலையை இந்த பகுதியில் அகலப்படுத்திய நிலையில், அந்த பகுதியில் ஏரளமான துரித உணவங்கள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களுக்கு வரும் கனரக வாகன ஓட்டிகள், 200 மீட்டர் நீளத்திற்கு சாலையின் இருபுறமும் தங்களின் வாகனங்களை நிறுத்தி வைத்து சாலையை ஆக்கிரமிக்கின்றனர். இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. உணவகங்களுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த, அந்த உணவகங்களில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement