எந்த துறைகளிலும் இந்தியர்களால் சாதிக்க முடியும்: ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேச்சு

புதுச்சேரி: 'எந்த துறைகளிலும் இந்தியர்களால் சாதிக்க முடியும்' என இந்திய பாதுகாப்புத் துறை ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேசினார்.

புதுச்சேரியில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் ஏவுகணை மற்றும் தொழில்நுட்பம் உருவாக்கும் துறையாக டி.ஆர்.டி.ஓ., (டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் ஆர்கனிசஷன்) உள்ளது. இன்று உலகில் பல நாடுகளில் போர் அபாய சங்கு ஒலிக்கிறது. அப்படிப்பட்ட சூழல் இந்தியாவில் இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஏவுகணை, பாதுகாப்பு தொழில்நுட்ப நடவடிக்கைகள் தான்.

போர் விமானம், போர் கப்பல், நீர் மூழ்கி கப்பல், ராணுவ கனரக டேங்க் வாகனங்கள், மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள், சூப்பர் கணினி, 'ஏஐ' உள்ளிட்ட பல துறைகளில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள், ஏவுகணைகளை களமாடும் ஒரே நிறுவனம் டி.ஆர்.டி.ஓ., உள்ளது.

இந்தியாவில் 4ம் தலைமுறையால் நவீன போர் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. போர் விமானங்களின் இன்ஜின் தயாரிக்கும் 7 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

எந்த துறையிலும், இந்தியர்களால் சாதிக்க முடியும். சவால்கள் இருக்கும் சோதனைகள் இருக்கும். ஆனால் உழைத்தால் நம்மால் வெற்றி பெற முடியும்.

விமான துறை மற்றும் அனைத்து துறைகளில் பெண்கள் சாதிக்க முடியும். டி.ஆர்.டி.ஓ.,வில் சேர பி.இ., - பி.டெக்., - எம்.எஸ்சி., படித்தவர்கள் 'கேட்' நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

இதில், தேர்ச்சி பெற்ற பிறகு தான் 'செட்' தேர்வு எழுத முடியும். 'செட்' தேர்வில் வெற்றி பெற்றால் நேர்முக தேர்வு, அதற்கு பின் நீங்கள் விஞ்ஞானி ஆகலாம். தமிழில் படித்த நான் விஞ்ஞானியாக உள்ளேன். நீங்களும் விஞ்ஞானியாக மாறலாம். பி.காம்., படித்தாலும் விஞ்ஞான துறையில் வேலை உள்ளது. பி.எஸ்சி., படித்தவர்களும் இங்கு, துணை தொழில்நுட்ப நிலைகளில் பணியில் சேரலாம்.

பாதுகாப்புத் துறை தொடர்பாக உங்களிடம் புதிய யோசனை இருந்தால் எங்கள் நிறுவனத்திற்கு அனுப்பி வையுங்கள். வெற்றி பெற்றால் லட்சக்கணக்கில் பரிசு வழங்கப்படும்.

இந்திய அரசு, உத்திரபிரதேசம் மற்றும் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்பு தொழில்துறை திட்டம் அமைத்துள்ளது. தமிழகத்தில் சேலம், ஓசூர், திருச்சி, கோயம்புத்துார், சென்னை ஆகிய பகுதிகளில் இதற்காக 4,200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய சாதனைகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement