ஆழமான நீர்நிலைகள், அருவிகளில் குளிக்கும் போது தேவை விழிப்புணர்வு :ஆர்வமிகுதி, அஜாக்கிரதையால் தொடரும் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம்:அருவிகள், நீர்நிலைகளில் குளிக்கும் போது ஆர்வமிகுதி, அஜாக்கிரதையால் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்கள், அருவிகள், தடுப்பணைகள், குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அதிகம் உள்ளன. பருவமழை காலங்களில் நீர்வரத்து ஏற்பட்டு இவை நிரம்புவது வழக்கம்.
காட்டாற்று வெள்ளம் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள செடி, கொடிகள், மணல் ஆகியவற்றை அடித்துக்கொண்டு வருவதால் நாளடைவில் சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன.
இதுபோன்ற நீர்த்தேக்கங்களில் குளிக்கும் போது சேற்றில் சிக்கிக்கொண்டால் வெளியே வருவது சிரமம். அவர்களை காப்பாற்ற முயன்றவர்களும் சேற்றில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடக்கின்றன.
இந்நிலையில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து நீர்நிலைகளுக்கு சென்று நீச்சல் தெரியாவிட்டாலும் தண்ணீரில் குதித்து அதீத மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர். ஆபத்தை உணராமல் நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளுக்கு சென்று சுழல், சேற்றில் சிக்கிக்கொள்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து சுற்றுலா வருபவர்கள் அருவிகள், நீர்நிலைகளில் குளித்து ஆபத்தில் சிக்குவதும் அதிகம் நடக்கிறது. நன்றாக நீச்சல் தெரிந்தவர்களும் கூட சேறு, புதை மணலில் சிக்கிக்கொண்டால் தப்பிப்பது சிரமம்.
ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவியில் குளிக்க வருபவர்கள் ஆர்வம் மிகுதியால் ஆழமான பகுதிகளுக்கு சென்று சுழல், புதை மணலில் சிக்கி பலியாவது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு இந்த அருவியில் குளித்த கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
எனவே அருவிகள், தடுப்பணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் போது அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் குறித்து கவனமுடன் இருக்க வேண்டும்.
அலட்சியம் வேண்டாமே நீர்நிலைகள் எவ்வளவு ஆழம், அதிலுள்ள ஆபத்துக்கள் குறித்து மேலோட்டமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சாகசம் செய்வதாய் நினைத்து நீர்நிலைகளில் விளையாடுவதால் அவர்கள் வாழ்க்கையையே இழக்க நேரிடுவதுடன் குடும்பத்தினருக்கும் மீளா துயரத்தை ஏற்படுத்ததும். இதனை எண்ணி பார்க்க வேண்டும். நீர்நிலைகளில் கொடிய நீர்வாழ் உயிரினங்கள் இருப்பின் அதனாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு.
விடுமுறை நாட்களில் வேறு பயனுள்ள வழியில் தங்களது பொழுதை கழிக்க பழகிக்கொள்ள வேண்டும். ஆர்வம் மிகுதியால் ஆபத்தை தேடிக் கொள்ளக் கூடாது.-
- கருப்புச்சாமி, கல்லூரி முதல்வர், பழநி.
மேலும்
-
முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும்; உளுந்துார்பேட்டை வேட்பாளர் குமரகுரு உறுதி
-
நாராயணபுரம் ஏரியில் மூழ்கி மாயமான வாலிபர் உடல் மீட்பு
-
தி.மு.க., ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது ;வில்லிவாக்கம் விஜயகுமார் ஆக்ரோஷ பேச்சு
-
இஸ்திரி போட்ட அ.தி.மு.க., வேட்பாளர்; திருவொற்றியூரில் கவனம் ஈர்த்த ஓட்டு சேகரிப்பு
-
'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி; அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் வாக்குறுதி
-
ஆயிரம்விளக்கில் 'விசேஷ' துண்டு பிரசுரம் ;பரபரப்பை கிளப்பிய த.வெ.க., பிரபாகர்