'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி; அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் வாக்குறுதி
வேளச்சேரி: ''வேளச்சேரி தொகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், மீட்பு பணிக்காக, 'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்படும்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் அசோக் கூறினார்.
வேளச்சேரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அசோக், அடையாறு, வேளச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தார். கடந்த 2011 - 16 வரை வரை, தான் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது செய்த பணிகளையும், மீண்டும் வெற்றி பெற செய்தால் செய்ய உள்ள பணிகள் குறித்தும், மக்களிடம் விளக்கினார்.
அசோக் கூறியதாவது:
அபார வளர்ச்சி அடைந்துள்ளதால், சாலையில் ஏற்படும் நெரிசலை தடுக்க, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், அடையாறு, பெசன்ட் நகர் பகுதியில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வேளச்சேரியில் தீயணைப்பு நிலையம், அ.தி.மு.க., ஆட்சியில் 2014ல் கொண்டு வரப்பட்டது. சொந்த கட்டடம் கட்ட, 20 லட்சம் ரூபாய் கொடுத்து, 4,056 சதுர அடி இடம் வாங்கியும், தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வெற்றி பெற்றதும், தீயணைப்பு நிலையம் கட்டப்படும்.
தொகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்துள்ளதால், மீட்பு பணிக்காக, 'ஸ்கை லிப்ட்' தீயணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்படும். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தின்போது, பகுதி செயலர் கண்ணன், சிவசுப்பிரமணியன், பா.ஜ., தொகுதி ஒருங்கிணைப்பாளர் சாய்ராம் லட்சுமி, சிவகுமார், முரளீதரன், பா.ம.க., மாவட்ட செயலர் ஜனார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.