எரிபொருள் தட்டுப்பாடு: இனி 2 நாள் விடுமுறை
காத்மாண்டு:நேபாளத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க வாரம் இருநாள் விடுமுறையை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போரால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டு, விலையும் உயர்ந்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம், எரிபொருள் தேவைக்கு நம் நாட்டையே அதிகம் நம்பியுள்ளது. ஈரான் போரால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் வினியோகத்தில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நேபாளத்துக்கு அனுப்பப்படும் எரிபொருள் அளவு குறைந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தவிர தட்டுப்பாடும் ஏற்பட்டிருப்பதால், அதை சமாளிக்கும் வகையில், வாரத்துக்கு இரு நாட்கள் பொதுவிடுமுறை அளிக்கும் திட்டத்தை நேபாளம் அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்காது. குறைவான வேலை நாட்களை சரிகட்ட, திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான சட்டப்பூர்வ கட்டமைப்பை உருவாக்கவும் நேபாள அரசு முடிவு செய்துள்ளது.