கடைசி நாளில் களைகட்டியது; இபிஎஸ், நயினார் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல்



சென்னை: சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என, நான்கு முனை போட்டி நிலவுகிறது. இது போக, இந்த கூட்டணிகளில் இடம் கிடைக்காத கட்சிகள் சில, கூட்டணியாகவும், தனியாகவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது.

அரசு விடுமுறை நாட்கள் போக, இதுவரை மூன்று நாட்கள் வேட்பு மனு தாக்கல் நடந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட, இதுவரை 3,430 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆண் வேட்பாளர்களிடம் இருந்து 2,731 மனுக்களும், பெண் வேட்பாளர்களிடம் இருந்து 698 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால், தேர்தல் நடத்தும் அலுவலகங்களில், இன்று வேட்பு மனு தாக்கல் களை கட்டி வருகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் 28 வேட்பாளர்கள், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பா.ஜ.,வின் 27 வேட்பாளர்கள் உள்பட திமுக, தவெகவினரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

சாத்தூரில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உடனிருந்தார். கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.

Latest Tamil News


அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன், சக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Latest Tamil News

எம்ஆர் காந்தியும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Latest Tamil News


அதேபோல, எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, எடப்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். செல்லூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணி கட்சியினருடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Latest Tamil News



திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சிவசங்கர், ரகுபதி, பிடிஆர் மற்றும் அப்பாவு, கடற்கரை ராஜ், கருணாஸ் உள்ளிட்டோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


Latest Tamil News

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

டோக்கன்



பிற்பகல் 3:00 மணிக்கு முன் எத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு அனுமதி தரப்படும். டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய எவ்வளவு நேரமானாலும் அனுமதிக்கப்படும். 3:00 மணிக்கு அப்புறம் வருபவர்களுக்கு அனுமதி தரப்படாது; அலுவலக கதவுகள் மூடப்பட்டு விடும். நாளை, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்க உள்ளது.

Advertisement