மாணவி கொலை வழக்கில் கைதானவர் ஜாமின் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதி மாணவியை கொலை செய்த வழக்கில் கைதான தர்மமுனீஸ்வரனுக்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி தர்மமுனீஸ்வரன், எட்டயபுரம் பகுதியில் ஒரு மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் அவருக்கு துாத்துக்குடி மகளிர் நீதிமன்றம் 2024 ல் ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து தர்மமுனீஸ்வரன் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார். அதன் மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதிக்கக்கோரி மனு செய்தார். தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்து 2025 டிச.,8ல் உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்த வழக்கில் தர்மமுனீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோல் மாணவியின் பெற்றோர் தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: தர்மமுனீஸ்வரனுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமின் அனுமதித்து ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்றனர்.

Advertisement