கையிலா காசும் இல்ல, கட்சியும் நிதி தரல விழி பிதுங்கி நிற்கும் ம.தி.மு.க., வேட்பாளர்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) தொகுதி், தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., வுக்கு ஒதுக்கப்பட்டது. சீர்காழி அருகே உள்ள அகர பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த செந்தில்செல்வத்திடம் தேர்தல் செலவு செய்யும் அளவிற்கு பண வசதி இல்லை. கட்சி நிதியும் வராததால் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை கூட திறக்க முடியாத நிலையில் தவிக்கிறார். இதனால் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஓரிடத்தில் அமர்ந்து பேசி திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியினர் எவரும் உதவ முன்வராத நிலையில் பணம் புரட்டுவதில் வேட்பாளர் செந்தில்செல்வன் மும்முரம் காட்டி வருகிறார். பணமின்றி ம.தி.மு.க., வேட்பாளரால் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைக்க முடியாமல் விழிவிதுங்கி நிற்கிறார்.

ஆனால், எதிரணியான அ.தி.மு.க., வேட்பாளர் சக்தி, முன்கூட்டியே திட்டமிட்டு தேர்தல் செலவுக்கு பணம் திரட்டி வைத்திருப்பதால் தடங்கல் இன்றி கூட்டணி கட்சியினரை அழைத்துச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனால் சீர்காழி தொகுதி தேர்தல் களத்தில் அ.தி.மு.க., வின் பிரசாரம் முதன்மை பெற்றுள்ளது.

Advertisement