மாவட்டத்தில் சோதனை: ரூ.8.59 கோடி பறிமுதல்

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில், முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரத்து 187 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் அல்லது பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் உரிய ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்காணிக்க திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும், தொகுதிக்கு தலா ஒன்பது குழுக்கள் வீதம் மொத்தம் 72 பறக்கும் படைகளும், 72 நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்ச் 15 முதல் நேற்றுமுன்தினம் காலை வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், முறையான ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 8 கோடியே 59 லட்சத்து 74 ஆயிரத்து 187 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒரு கோடியே 62 லட்சத்து 67 ஆயிரத்து 377 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement