ஈரான் முழுதும் வான்வழி தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

டெஹ்ரான்:அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் முழுதும் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில், 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேற்காசியாவில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று அதிகாலை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. குறிப்பாக, தலைநகர் டெஹ்ரானுக்கு தென்மேற்கே உள்ள எஸ்லாம்ஷஹர் நகரில், ஒரு குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டதில், 13 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.

கோம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று டெஹ்ரானின் பல இடங்களிலும் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், மொத்தம் 34 பேர் பலியாகி உள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அங்குள்ள ஷரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வளாகத்திலும் தாக்குதல் நடைபெற்றது. இதனால் அங்குள்ள இயற்கை எரிவாயு வினியோக மையம் பாதிக்கப்பட்டு, அந்த பகுதியில் எரிவாயு வினியோகம் தடைபட்டது. போர் காரணமாக நாடு முழுதும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால், பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை.

இதற்கு பதிலடியாக, ஈரான் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் இருந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

Advertisement