கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பு தவிர்க்க அறிவுரை
உடுமலை: ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றினால், கத்தரி சாகுபடியில் மகசூல் இழப்பை தவிர்க்கலாம் என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உடுமலை சின்னவீரம்பட்டி, குட்டியகவுண்டனுார், கண்ணமநாயக்கனுார், குறிஞ்சேரி சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடி தற்போது அதிக வெயில் காரணமாக பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது.
தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாததால், கத்தரி விலை கிலோ 30-40 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கத்தரி சாகுபடியில், மகசூல் இழப்பை தவிர்ப்பது குறித்து, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது: கத்தரி சாகுபடியில், ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாண்டால், மகசூல் இழப்பை தவிர்க்கலாம். நாற்றுப்பருவத்தில் அழுகல் நோயால் தண்டு அழுகி சாய்ந்து விடுகின்றன.
வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையிலும், விதையளவை கூட்டி விதைப்பு செய்யும் போது இந்நோய் அதிகமாக தோன்றுகிறது. மண் வாயிலாக பரவும் இந்த நோய், விதைகளை அழுகச் செய்து முளைக்க விடுவதில்லை.
வாடல் நோய் தாக்கினால், செடிகளின் அடி இலைகள் பழுத்தும் துவண்டும் தொங்கிக் கொண்டிருக்கும். இறுதியில் இலைகள் காய்ந்து செடி மடிந்துவிடும்.
இலைக்கருகல், பழ அழுகல் நோய் 'போமாப்சிஸ் வெக்சன்ஸ்' எனும் பூஞ்சாணத்தால் உண்டாகிறது. பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள பழங்கள் அழுகி கருத்துவிடும்.
இலைப்புள்ளி நோயில் பல புள்ளிகள் ஒன்று சேர்வதால், பாதிக்கப்பட்ட இலைகள் கருகி காய்ந்து விடும்; காய்கள் சிறுத்துக்காணப்படும்.
கத்தரி தோட்டத்தில் வேர் முடிச்சு நுாற்புழுவின் தாக்குதல் இருந்தால், பாக்டீரியா வாடல் நோய் உண்டாகும் அளவு அதிகரிக்கும். தேமல் நோயால் தாக்கப்பட்ட செடி குட்டையாயிருக்கும். செடியின் உற்பத்தித்திறன் குறையும். ஓரிரு சிறிய காய்கள் மட்டுமே உண்டாகியிருக்கும்.
சிற்றிலை நோய் நுண்ணுயிரியால், இலைத் தத்துப் பூச்சியால் பரவுகிறது. நோய் எதிர்ப்புத்திறன் வாய்ந்த ரகங்களைப் பயிரிடுவது சிறந்த கட்டுப்பாட்டு முறையாகும்.
ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் 'டிரைக்கோடர்மா' பூஞ்சாணம் அல்லது 10 கிராம் 'பேசில்லஸ் பாக்டீரியா' கலவையை கலந்து விதைத்தால் நோய் தாக்காது.
பரிந்துரைக்கும் அளவில் விதைகளை மேட்டுப்பாத்தியில் நாற்றுவிட்டு, அளவாக நீர்ப்பாய்ச்சினால் சேதத்தைக் குறைக்கலாம். ரசாயன முறையில் இதனைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் வீதம் தாமிர ஆக்சிக்குளோரைடு பூசணாக் கொல்லியை கரைத்து பூவாளியால் தெளிக்கலாம்.
வேரழுகல் மற்றும் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பயிர் சுழற்சியில் நெல், கம்பு, கேழ்வரகு மற்றும் சோளத்தை சேர்த்து பயிரிடலாம்.
ஆழமாக கோடை உழவு செய்வதன் வாயிலாக, அடியில் தங்கியிருக்கும் புழு, பூச்சி, நச்சுயிரிகளை அழிக்க முடியும். இத்தகைய ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும்
-
துணை தேர்தல் கமிஷனர் ஆய்வு
-
பால பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
-
நேரு கல்லுாரியில் 3,300 மாணவர்களுக்கு பணி ஆணை
-
'காசாகிராண்ட்' சி.பி.எல். சீசன்-1 திருவிழா: 162 ரன் குவித்த குபேரா தண்டர்ஹாக்ஸ்
-
சுயே. வேட்பாளர்களுக்கு சின்னம் ;தர்பூசணி, இஞ்சி, வெண்டைக்காய்
-
மாற்று திறனாளிகள், முதியவர்கள் ஓட்டு போட செல்வதற்கு இலவச பஸ்