இறுதிக்களத்தில் 116 வேட்பாளர்கள்! மாவட்டத்தில் இனி 'அனல்' பறக்கும்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், அரசியல் கட்சி, சுயேட்சைகள் உள்பட மொத்தம் 116 வேட்பாளர்கள் தேர்தல் களம் காண்கின்றனர். இனி மாவட்டம் முழுக்க பிரசாரம் 'அனல்' பறக்கும்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30 முதல் இம்மாதம் 6ம் தேதி வரை நடந்தது. பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக, நான்கு நாட்கள் மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்பட அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர், 178 பேர் மனு தாக்கல் செய்தனர். கடந்த 7ல் நடந்த பரிசீலனையில், 44 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; 134 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Latest Tamil News

சின்னம் ஒதுக்கீடு



மனு வாபஸ் பெற, நேற்று மாலை, 3:00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தங்கள் பிரதான வேட்பாளரின் மனுக்கள் ஏற்கப்பட்டதையடுத்து, மாற்று வேட்பாளர்கள், தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து அந்தந்த தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில், சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.





இறுதிப்பட்டியல்



திருப்பூர் வடக்கு தொகுதியில் வேட்பாளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி, வேலம்பாளையத்திலுள்ள மண்டல அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடந்தது. வடக்கு தொகுதியில், 17 பேரில், 2 பேர் வாபஸ் பெற்றனர். வேட்பாளர் 15 பேரின் விவரங்களுடன் கூடிய இறுதி பட்டியல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது.

Tamil News

திருப்பூர் தெற்கு தொகுதியில், 28 பேரில், 4 பேர் வாபஸ் பெற்றதால், 24 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். பல்லடம் தொகுதியில், 19 பேரில், 4 பேர் வாபஸ் பெற்றனர்; இதனால், வேட்பாளர்கள் 15 பேர் களத்தில் உள்ளனர். அவிநாசி தொகுதியில், 14 பேர் களத்தில் உள்ளனர்.

காங்கயத்தில், 2 பேர் வாபஸ் பெற்றதால், 15 பேர் களத்தில் உள்ளனர். தாராபுரத்தில், ஒருவர் வாபஸ் பெற்றதையடுத்து, ஒன்பது பேர் களத்தில் உள்ளனர். உடுமலையில், 16 பேரில், 5 பேர் வாபஸ் பெற்றதையடுத்து, தேர்தல் களத்தில், வேட்பாளர் 11 பேர் உள்ளனர். மடத்துக்குளம் தேர்தல் களத்தில், வேட்பாளர்கள் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மாவட்டத்தின் எட்டு தொகுதிகளிலும், மொத்தம் 134 பேரில், 18 பேர் வாபஸ் பெற்றதால், 116 வேட்பாளர்கள், தேர்தல் களம் காண்கின்றனர்.



போட்டோவுடன் பேலட் ஷீட்



தற்போதைய இறுதி வாக்காளர் பட்டியல்படி, வேட்பாளரின் கலர் போட்டோ, பெயர், கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றுடன் அந்தந்த தொகுதிக்கான பேலட் ஷீட் பிரின்ட் செய்யப்படும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பேலட் ஷீட் பொருத்தப்பட்டு, தேர்தல் நாளில் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

---

திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பான கூட்டம், வேலம்பாளையத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., சிவபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது.

Advertisement