தி.மு.க.,வை தாங்கிப்பிடித்த திருமாவுக்கு கிடைத்த பரிசு: பழனிசாமி கடும் விமர்சனம்
சேலம்:''அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தி.மு.க., அமைச்சர்களின் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி தொகுதியில், கடந்த 1989, 1991, 1996, 2006, 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள பழனிசாமி, இந்த தேர்தலிலும் இடைப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அளித்த பேட்டி:
மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், 210 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறுவோம். தே.மு.தி.க.,வுக்கு அரை சதவீதம் ஓட்டு வங்கி தான் என, ஊடகத்தில் வந்த செய்தியை தான் தெரிவித்தேன். தே.மு.தி.க.,விற்கு 2026-ல் எம்.பி., 'சீட்' கொடுப்பதாக கூறி இருந்தேன். அவர்கள் கூட்டணி மாறி விட்டதால், எம்.பி., சீட் தரவில்லை.
தி.மு.க., கூட்டணியில், பல இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்தை வரையாமல் இருக்கின்றனர்; அந்த சின்னத்தை ஒதுக்கி வருகின்றனர். இதற்கு திருமாவளவன் தான் பதில் கூற வேண்டும். தி.மு.க.,வை அளவுக்கு அதிகமாக தாங்கிப் பிடித்த திருமாவளவனுக்கு கிடைத்த பரிசு இது.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டு வருவோம் என மோடியும், அமித் ஷாவும் சொல்வரா என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். அதற்கு உதயநிதி தான் பதில் கூற வேண்டும். ஏனெனில், உதயநிதி தான், ஹிந்தியை கற்று தரும் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார்.
டில்லியா, தமிழகமா என ஸ்டாலின் கேட்கிறார். இது சட்டசபை தேர்தல் என்பதையே புரியாமல் அவர் பேசிக்கொண்டு இருந்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றமும், அமலாக்கத் துறையும் ஆதாரத்தோடு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அ.தி.மு.க., அரசு அமைந்ததும், ஊழல் தி.மு.க., அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 15ம் தேதி, கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன். த.வெ.க., தலைவர் விஜய், அவர்களுக்கும், தி.மு.க.,விற்கும் தான் போட்டி என கூறுவது, அறியாமையின் வெளிப்பாடு.
கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், பட்டியல் இன மக்களை பாகுபாடு பார்ப்பதாகவும், கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது குறித்தும் தி.மு.க., - எம்.பி., ராஜா பேசிய ஆடியோ, தேசிய அளவில் பேசப்படுகிறது. ராஜா பேசியதை நான் சொன்னால், ராஜா மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு, என் மீது ஸ்டாலின் பாய்வதில் என்ன நியாயம்?
இவ்வாறு அவர் கூறினார்.