ஆட்டோ காஸ் பிரச்னைக்கு தீர்வு காண அரசு அதிகாரிகளுடன் 10ல் ஆலோசனை கூட்டம்

பெங்களூரு: ஆட்டோ காஸ் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், வரும், 10ம் தேதி அரசு அதிகாரிகள் மற்றும் காஸ் நிலையங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக உணவு துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

பெங்களூரில் கடந்த சில நாட்களாக ஆட்டோ காஸுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. காஸ் நிலையங்களுக்கு முன் ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

குறிப்பாக, எல்.பி.ஜி., காஸுக்கு அதிகளவு தட்டுப்பாடு நிலவுகிறது. காஸ் நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே காஸ் வினியோகிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் எல்.பி.ஜி.,யின் விலை, 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், எல்.பி.ஜி., கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால், ஆட்டோ ஓட்டுநர்கள் மாநில அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து, உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவுடன் நேற்று ஏழு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் தலைவர்கள் பேச்சு நடத்தினர். காலை 8:00 முதல் 8:30 மணி வரை முனியப்பாவுடன் அவரது வீட்டில் பேச்சு நடந்தது.

அப்போது, 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் எல்.பி.ஜி., தற்போது, 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்தனர். நிலைமை விரைவில் சரிசெய்யப்படும் என முனியப்பா உறுதியளித்தார்.

கருப்பு கொடி இதையடுத்து, ஓட்டுநர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே சமயம், அவர்கள் கூறுகையில்,'காஸ் தட்டுப்பாடு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், அமைச்சர் முனியப்பா செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடிகளை காட்டியபடி போராட்டம் நடத்துவோம்' என்றனர்.

இதையடுத்து, முனியப்பா அளித்த பேட்டி:

சில தனியார் காஸ் நிலையங்களில், காஸ் விலை கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்ப்பதற்காக வரும், 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன்.

தனியார் காஸ் நிலையங்களின் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் கூட்டத்தில்பங்கேற்பர்.

உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மாதத்திற்கு முன்னரே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை மத்திய அரசு பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால் பிரச்னை எழுந்திருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல் இப்பிரச்னை குறித்து, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:

நம் நாட்டில், 70 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இருக்கிறது. எனவே, மக்கள் கவலைப்பட வேண்டாம்.

வர்த்தக சிலிண்டர் வினியோகம், 70 சதவீதம் அதிகரித்து உள்ளது. 60 சதவீத எல்.பி.ஜி., உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகிறது. 40 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்கிறோம்.

அரசுக்கு சொந்தமான எல்.பி.ஜி., நிலையங்களில் ஒரு லிட்டர் எல்.பி.ஜி., 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் சர்வதேச சந்தையின்விலை உயர்வு காரணமாக 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பிரச்னையில் அரசியல் செய்வது சரியல்ல.

ஆட்டோ ஓட்டுநர்கள் எல்.பி.ஜி.,க்கு பதிலாக பெட்ரோலை பயன்படுத்த வேண்டும். பெட்ரோல் எப்போதும் கிடைக்கக்கூடிய எரிபொருளாகும். எனவே, ஆட்டோ ஓட்டுநர்கள்பெட்ரோலுக்கு மாற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement