கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகள் 'திக்... திக்' பயணம்

திருமழிசை: தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர் வைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தற்போது சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை மற்றும் தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயரமான கட்டங்கள் மீது விளம்பர பேனர் வைப்பது அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன், திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் உள்ள மண்ணுார், வளர்புரம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

மேலும், விளம்பர பேனரின் ஒரு பகுதி கிழிந்து, நெடுஞ்சாலையின் மறுபுறம் உள்ள மின்கம்பத்தில் தொங்குகின்றன. அதிர்ஷ்டவசமாக விளம்பர பேனர் கிழிந்து பறக்கும் போது, வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர் வைப்பதை தடுக்க வேண்டும். மேலும், கிழிந்து தொங்கும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement