முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக அறிக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் அமலாக்க துறை மனு

பெங்களூரு: 'முடா' வழக்கில், சித்த ராமையா குற்றமற்றவர் என்ற அறிக்கையை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.

'முடா' என்ற, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார், சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை கடந்த ஜனவரி 29ம் தேதி, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஏற்றுக்கொண்டார்.

முதல்வர் குற்றமற்றவர் என்ற அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து, சித்தராமையாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனு மீது விசாரணை நடந்து வரும் நிலையில், அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தை நாடி உள்ளது.

'சித்தராமையா, பார்வதி உள்ளிட்டோர் முறைகேடு செய்ததற்கு, நாங்கள் ஆதாரம் சேகரித்து வைத்துள்ளோம். அதனால், குற்றமற்றவர்கள் என்ற அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

இம்மனு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவால் சற்று நிம்மதி அடைந்த சித்தராமையாவுக்கு, அமலாக்கத்துறை இப்போது, 'ஷாக்' கொடுத்து உள்ளது.

Advertisement