உ.பி., வழக்கறிஞர் கொலையில் 3 பேருக்கு துாக்கு தண்டனை

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் கடந்த 2019ல் வழக்கறிஞர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு துாக்கு தண்டனையும், ஒருவரும் ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முகமது சமீர். இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே 45 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது.

இதன் காரணமாக பணம் தந்த தரப்பினர், கடந்த 2019 அக்டோபர் 15ம் தேதி சமீரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின் உடலை சிக்ரி கிராம வனப்பகுதியில் வீசினர்.

சமீரின் தந்தை, மகனை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ரிஸ்வான், சிங்கோல் அல்வி, ஷாலு ஆகியோர் சமீரை கொலை செய்தது தெரிந்தது. தினேஷ் என்பவர் உடலை அப்புறப் படுத்த உதவியுள்ளார்.

அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு முசாபர்நகர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி ரவிக்குமார் திவாகர், கொலை செய்த மூவருக்கு துாக்கு தண்டனையும், உடலை அப்புறப்படுத்த உதவிய தினேஷுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

துாக்கு தண்டனையை நிறைவேற்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Advertisement