பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வரும் 14ல் அதிகார நந்தி உத்சவம்
உத்திரமேரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு அதிகார நந்தி சேவை உத்சவ விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் அதிகார நந்தி சேவை உத்சவம் நடந்து வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான உத்சவம் வரும் 14ம் தேதி காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடக்கிறது.
இதையொட்டி அன்று அதிகாலை 2:30 மணிக்கு மூலவருக்கும், 3:00 மணிக்கு உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
அதிகாலை 4:00 மணிக்கு டாக்டர் ராம்குமாரின் மேண்டலின் இசையும், காலை 6:00 மணிக்கு மஹாதீப ஆராதனையும், சுவாமி உட்பிரகார புறப்பாடும் நடக்கிறது.
காலை 8:00 மணிக்கு பிரம்மீஸ்வரர் அதிகார நந்திசேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அதை தொடர்ந்து 600 சிவனடியார்கள் திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்க, சிவ நடனம், சக்தி நடனம், சிலம்பாட்டம், புலி ஆட்டம், சேவை ஆட்டம், கட்டை கூத்து, ராஜமேளம், அதிரெடி தப்செட் இசையுடன் சுவாமி வீதியுலா நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு தமிழ் புத்தாண்டு பலன் வாசிக்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.