விறகு அடுப்புக்கு மாறிய சாலையோர டீ கடைகள்

கூடலுார்: கூடலுார் பகுதியில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சாலையோர டீ கடைகாரர்கள், விறகு அடுப்பு பயன்படுத்தி கடையை நடத்த துவங்கியுள்ளனர்.

வளைகுடா நாடுகள் இடையே, தொடரும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டு வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா மாவட்டமான நீலகியில் பல உணவகங்கள், டீ கடைகள, பேக்கரிகள் மூடப்பட்டு வருகின்றனர். இதனை சார்ந்துள்ள பலர் வேலையிழந்தனர். உணவு கிடைக்காமல் சுற்றுலா பயணிகளும் சிரப்பட்டனர்.

இந்நிலையில், பல உணவங்கள் விறகு அடுப்பு அமைத்து உணவு சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனிடையே, வர்த்தக சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்தியது. எனினும், சிலிண்டர் தட்டுபாடு தொடர்கிறது. மறுபுறம் கள்ள சந்தையில், வர்த்தக சிலிண்டர், 3,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

சிறு உணவகங்கள், டீ கடைகாரர்கள் கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்க முடியாத நிலையில், வருவாய் இன்றி குடும்ப செலவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க, சிறு உணவகங்கள், சாலையோர டீக்கடைகாரர்கள் மீண்டும் விறகு அடுப்பு பயன்படுத்தி வியாபாரத்தை துவங்கியுள்ளனர்.

வியாபாரிகள் கூறுகையில்,'வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு மட்டுமின்றி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டரை வாங்க முடியாமல், டீ கடைகள் திறக்க முடியவில்லை. இதனால், வருவாய் இன்றி குடும்ப செலவுக்கு சிரமம் ஏற்பட்டது.

தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், குடும்ப செலவை சமாளிக்க, விறகு அடுப்பு பயன்படுத்தி டீ கடைகள் நடத்த துவங்கியுள்ளோம். அரசு தடையின்றி வர்த்தக சிலிண்டர் வழங்கினால் மட்டுமே, தீர்வு கிடைக்கும்,' என்றனர்.

Advertisement