சவுக்கு சங்கர் மீண்டும் கைது

18

-நமது நிருபர்-

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.


பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசு நிர்வாகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தவறு பற்றி வெளிப்படையாக யூடியூப் சேனல்களில் பேட்டி அளித்து வந்தார்.

இது, அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், 'பெண் போலீசாரை அவதுாறு செய்தார்' என்று குற்றம் சாட்டி, போலீசார் அவரை 2024ல் கைது செய்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரை ஜாமினில் விடுவித்தது. பழையபடி அவர், யூடியூப் சேனலில் பேட்டி அளித்து வந்தார்.
இந்நிலையில், 'கஞ்சா வைத்திருந்தார்' என்பது உட்பட வேறு சில வழக்குகளில் அவர் 2024 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பேட்டி அளிக்கக்கூடாது; வழக்கில் தொடர்புடைய நபர்களை சந்திக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது.


எனினும் அவர் ஜாமின் நிபந்தனைகளை மீறி வருவதாக போலீசார் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். வழக்கில் அவரை கைது செய்வதற்கும் போலீசார் தேடி வந்தனர். அவரது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கை முடக்கவும், இன்டர்நெட் ஐ.பி., முகவரியை கேட்டும், சென்னை போலீசார், எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்த சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ஒரு யூடியூபரை தேடிச்சென்று ஆந்திராவில் போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுந்துள்ளது.

Advertisement