தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு விடுப்புடன் ஊதியம் வழங்க வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி:தேர்தல் நாளன்று, அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை வலியுறுத்தி உள்ளது.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் துறை சார்பில், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர், ஜவஹர் மகாலிங்கம் தலைமையில் நடந்த கூட்டத்தில், பொறுப்பு துணை இயக்குனர் ஹேமலதா மற்றும் சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் பங்கேற்றனர். கூட்டத்தில் இணை இயக்குனர் ஜவஹர் மகாலிங்கம் கூறுகையில், 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 பி-ன் படி தேர்தல் நடக்கும் நாளன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து வகை தொழலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும். ஓட்டளிப்பது அவசியம் என்பதை தொழிற்சாலை நிர்வாகத்தினர், தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

Advertisement