மாரத்தான்: சாவன் சாதனை

ரோட்டர்டாம்: மாரத்தான் ஓட்டத்தில் இந்தியாவின் சாவன் பார்வல் தேசிய சாதனை படைத்தார்.
நெதர்லாந்தின் ரோட்டர்டாமில், சர்வதேச மாரத்தான் ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் சாவன் பார்வல், கோபி பங்கேற்றனர். மொத்தம் 42.195 கி.மீ., துாரம் கொண்ட இலக்கை 2 மணி நேரம், 11 நிமிடம், 58 வினாடியில் கடந்த சாவன், 20வது இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 48 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்தார் சாவன். இதற்கு முன், 1978ல் இந்தியாவின் ஷிவ்நாத் சிங், பந்தய துாரத்தை 2 மணி நேரம், 12:00 நிமிடத்தில் கடந்தது தேசிய சாதனையாக இருந்தது.


ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சாவன் பார்வல் 28, இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். பெடரேஷன் கோப்பை தேசிய சாம்பியன்ஷிப் (வெள்ளி, 10000 மீ., ஓட்டம், 2022), தேசிய விளையாட்டில் (வெண்கலம், 5000 மீ., ஓட்டம், 2022) பதக்கம் கைப்பற்றிய இவர், 2023ல் துபாயில் நடந்த ஆசிய பாதி மாரத்தான் ஓட்டத்தில் தனது முதல் சர்வதேச பதக்கத்தை (வெண்கலம்) தட்டிச் சென்றார். டில்லி பாதி மாரத்தான், கொல்கட்டா ரன் உள்ளிட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.
மற்றொரு இந்திய வீரர் கோபி (2 மணி நேரம், 13 நிமிடம், 16 வினாடி) 23வது இடம் பிடித்தார்.

Advertisement