அ.தி.மு.க.,வும், தி.மு.க., வும் ஒன்றாகி விட்டீர்களா :மதுரையில் சசிகலா திடீர் கேள்வி

மதுரை:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில், போட்டியிடும் எங்கள் கூட்டணிவேட்பாளர் ஒருவரைஅ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆளை வைத்து அடித்து கடத்தியிருக்கிறார்; இப்போது நடப்பது தி.மு.க., அரசு; நீங்கள் இரண்டு கட்சியினரும் ஒன்றாகி விட்டீர்களா என சசிகலா மதுரையில் கேள்வி எழுப்பினார்.

அ.பு.ம.மு.க.,சார்பில் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், செக்கானுாரணி, வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் நடந்தது.

இதில் அக்கட்சியின் தலைவர் சசிகலா பேசியதாவது:

அரசு நடத்துபவர்கள் சுத்தமாக சரியில்லை. தலைமைக்கு வேண்டிய மூன்று அமைச்சர்களை வைத்திருக்கிறார்கள். எந்த துறையில் முடிவெடுக்க வேண்டுமானாலும், அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். இது தான் தி.மு.க., அரசில் நடக்கிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கூட்டணி வேட்பாளர் ஒருவரை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆளை வைத்து அடித்து கடத்தியிருக்கிறார். இப்போது நடப்பது தி.மு.க., அரசு. நீங்கள் இரண்டு கட்சியினரும் ஒன்றாகி விட்டீர்களா. 'யாராக இருந்தாலும், ஒண்டிக்கு ஒண்டி வா' என்று தான் ஜெயலலிதா அரசியல் செய்தார். நான் அவர் பின்னாடி உட்கார்ந்திருந்ததை பார்த்திருப்பீர்கள்.

எங்கு பார்த்தாலும், மனமகிழ் மன்றம் என்ற பெயரில் நீதிமன்றத்தை ஏமாற்றிக்கொண்டு, உங்கள் கட்சி ஆட்களையே வைத்து மதுக்கடை நடத்துகிறீர்கள். இதனால் தான் பெண்கள் வெளியே செல்ல முடியவில்லை. கோயிலில் சுவாமி பெயரில் மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு, ஆயிரம் கும்பாபிஷேகம் நடத்தி விட்டோம் என்கிறார்கள்.

இவ்வாறு பேசினார்.

Advertisement