கிராமங்களில் அடிப்படை வசதி நிறைவேற்றிட உறுதி: போடி தி.மு.க., வேட்பாளர் பன்னீர் செல்வம் ஓட்டு சேகரிப்பு

போடி:போடி கிராம பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன் என தி.மு.க., வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்து ஓட்டு சேகரித்தார்.

போடி தொகுதி தி.மு.க.,வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் போடியில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். சமுதாயகூடம், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கு சென்று நிர்வாகிகளிடம் ஆதரவு கோரி, குறைகளை கேட்டறிந்தார். நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள், ஏல விவசாயிகள் சங்க தலைவர், முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், அனைத்து மகசூல் விவசாயிகள் சங்கம், கார், வேன், ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம், பெயிண்டர், பிரிண்டிங் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி ஓட்டு சேகரித்தார்.

ஆதிபட்டி, வாழையாத்துபட்டி, பூதிப்புரம், மஞ்சிநாயக்கன்பட்டி, வலையபட்டி, கோடாங்கிபட்டி, காமராஜபுரம் பகுதியில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். ச.வாடிப்பட்டியில் மணிகண்டன்- நந்தினி தம்பதியின் ஆண் குழந்தைக்கு 'தளபதி' என பெயர் சூட்டினார்.

நேற்று தேனி அருகே ஸ்ரீரங்கபுரம், வெங்கடாசலபுரம், கோவிந்தநகரம், லட்சுமிபுரம், குப்பி நாயக்கன்பட்டி, கருப்பதேவன்பட்டி, ஜங்கால்பட்டி உள்ளிட்ட பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். வெற்றி பெற்றவுடன் கிராம பகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உடன் தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் கள் லட்சுமணன், ஐயப்பன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Advertisement