செயலிழந்த நிலையில் உழவர் சந்தைகள் மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்
மறைமலை நகர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 9 உழவர் சந்தைகளும் செயலிழந்த நிலையில் உள்ளதால், மாற்று தீர்வு காண வேண்டும் என, பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.
தமிழகத்தில் கடந்த 1996 -- 2001 இடையிலான தி.மு.க., ஆட்சியில், உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, நங்கநல்லுார், கீழ்கட்டளை, பல்லாவரம், மேடவாக்கம், ஜமீன் ராயப்பேட்டை, திருக்கழுக்குன்றம் ஆகிய 9 பகுதிகளில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
இத்திட்டம், தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. குறிப்பாக, 2011- -- 2021 அ.தி.மு.க., ஆட்சியில், உழவர் சந்தை கடைகள் நலிந்த நிலைக்கு சென்றன.
இந்நிலையில், 2021ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் செயல்பட, அரசு நிதி மற்றும் வேளாண் விற்பனை கமிட்டி நிதி என, மொத்தம் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 9 இடங்களில் உள்ள உழவர் சந்தை கடைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வேளாண் துறை அதிகாரிகள் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளை உழவர் சந்தைக்கு வரவைக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டன. என்றாலும், விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
விவசாயிகள் கூறியதாவது:
திருக்கழுக்குன்றம் உழவர் சந்தையில் 20 கடைகள் உள்ளன. இங்கு, துவக்கத்தில் 20 விவசாயிகள் கடை நடத்தி வந்தோம். தற்போது, 6 பேர் மட்டும் கடை நடத்தி வருகிறோம்.
விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து, நாள் முழுதும் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளதால், இதர விவசாய வேலைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மொத்த வியாபாரிகளிடம் 10 சதவீத விலையில் விற்பனை செய்வதே எங்களுக்கு சரிப்பட்டு வருகிறது.
எனவே, அரசு இத்திட்டத்தில் மாற்றம் செய்து, சாலையோர வியாபாரிகள் பயனடையும் வகையில், அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:
செங்கை மாவட்டத்தில் உள்ள 9 உழவர் சந்தைகளில் தினமும் 115 விவசாயிகள் 40 டன் அளவு தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதன் வாயிலாக 4,641 நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா