பதவிக்கு அருளும் ஆட்சீஸ்வரர் படையெடுக்கும் வேட்பாளர்கள்

அச்சிறுபாக்கம்: தமிழகத்தில், சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற வேண்டி, அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு, வேட்பாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில், இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.

பிற கோவில்களில் இல்லாத சிறப்பாக, ஆட்சிபுரீஸ்வரர், உமை ஆட்சீஸ்வரர் என, இரண்டு மூலவர்களாக சிவபெருமான் வீற்றுள்ளார். இத்தலம் தேவார பாடல் பெற்றது.

தேவர்களை துன்புறுத்திய அசுரர்களை அழிக்க, தேரில் புறப்பட்ட சிவபெருமான், விநாயகரை வணங்க தவறியதால், விநாயகர் கோபமடைந்து, இப்பகுதியில் தேரின் அச்சை இரண்டாக முறித்துள்ளார். இதன் காரணமாக, அச்சிறுபாக்கம் என்றழைக்கப்படுகிறது.

ஆட்சி அதிகார பதவி பெறுவது, இழந்த பதவியை மீண்டும் பெறுவது, பதவி உயர்வு, ஆளுமை நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு, இக்கோவில் இறைவனிடம் வேண்டினால் அது நிறைவேறுவதாக, பக்தர்கள் நம்புகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்க உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தேர்தலில் வெற்றிபெற வேண்டி, இக்கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.

இதுகுறித்து, கோவில் குருக்கள் ஒருவர் கூறியதாவது:

சிவபெருமான், பாண்டிய மன்னன் ஒருவருக்கு இங்கு காட்சியளித்து, அரசாளும் பதவி அருளியதாக, கல்வெட்டு உள்ளது. ஆட்சீஸ்வரரை வழிபட்டு வேண்டினால், உயரிய பதவி கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது.

தற்போது, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பல மாவட்டங்களைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement