மதுரை- தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதைக்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு

காரியாபட்டி;மதுரை- துாத்துக்குடி புதிய அகல ரயில் பாதைக்கு மத்தியரசு இந்நிதியாண்டில் ரூ.132 கோடி நிதி ஒதுக்கியுள்ளது . இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் பயண நேரத்தை குறைக்க, போக்குவரத்தை மேம்படுத்த, தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்க, 25 ஆண்டுகளுக்கு முன் மதுரை தூத்துக்குடிக்கு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய அகல ரயில் பாதை ஏற்படுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மதுரை வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி வழித்தடத்திற்கு மாற்றாக அமையும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது.

143.5 கி.மீ., தூரத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து, சிறிதளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்ட பணிகள் நடைபெற்று, அதில் தூத்துக்குடியிலிருந்து மீளவிட்டான், மேல்மருதுார் வரை 18 கி. மீ., தூரம் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டமும் நடந்தது.

அதற்குப் பின் ஒதுக்கப்பட்ட நிதியில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சர்வே பணிகள் நடந்தன. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டதால் ரயில் வருமா, வராதா என்கிற குழப்பத்தில் மக்கள் இருந்தனர். பல ஆண்டுகள் ஆகியும் அதற்கு பின் நிதி ஒதுக்காததால், இத்திட்டம் கைவிடப்பட்டதாக பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இத்திட்டம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தாமதப்படுத்துவதாக தெரிவித்தார், அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் விரைந்து நிலங்கள் கையகப்படுத்தி, திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து 2026 -- 27ம் ஆண்டுக்கான நிதி ரூ.132.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement