கக்கராயன் மலை குகையில் சிறுத்தை வனத்துறை மெத்தனம்! நள்ளிரவு வேட்டையால் மக்கள் அச்சம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட கக்கராயன் மலையில் சிறுத்தை பதுங்கி நள்ளிரவில் அங்குள்ள ஆடு, கோழிகளை வேட்டையாடி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு கிழக்கு பகுதியில், பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டை பிரிவை அடுத்துள்ள ஒன்னிபாளையம் ரோட்டில் புதிய சிறை வளாக கட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள கக்கராயன் மலையில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மலையை ஒட்டியுள்ள அடிவார தோட்டப்பகுதிகளில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, கோழிகளை வேட்டையாடி வருகிறது. இது குறித்து, வனத்துறையினருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,' பாறைகள் நிறைந்த கக்கராயன் மலை உச்சியில் குகை போன்ற அமைப்பில் சிறுத்தை கடந்த ஒரு மாதமாக தங்கி வருகிறது. பகல் நேரங்களில் அப்பகுதியில் உலா வரும் சிறுத்தை, இரவில் மலைக்கு கீழ் உள்ள வெள்ளமடை பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து, கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 'ட்ரோன்' பயன்படுத்தி, கக்கராயன் மலை உச்சியில் குகை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை போட்டோ எடுத்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் அடிவார பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறுத்தை இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட ஆடு, நாய் மற்றும், 10க்கும் மேற்பட்ட கோழிகளை வேட்டையாடி உள்ளது. காணாமல் போன கால்நடைகளின் எலும்பு துண்டுகள் மற்றும் எச்சங்கள் கக்கராயன் மலை உச்சியில் ஆங்காங்கே கிடப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை, மனிதர்களை வேட்டையாடுவதற்குள் கூண்டு வைத்து, பத்திரமாக பிடித்து, அடர்ந்த காட்டுப் பகுதியில் விட, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
@block_B@
நேற்று முன்தினம் கக்கராயன் மலை அடிவாரத்தில் வசிக்கும் கருப்புசாமி என்ற விவசாயி இரவில் சிறுநீர் கழிக்க வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். சிறுத்தை உறுமும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது, சுமார், 10 அடி தூரத்தில் நின்ற சிறுத்தை அவர் மீது பாய முயற்சித்தது. கருப்பசாமி வேகமாக கழிப்பிடத்துக்குள் நுழைந்து, கதவை தாழிட்டுக் கொண்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கழிப்பிட அறையில் இருந்து அவர் எழுப்பிய ஓசை கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். ஆட்கள் அதிகமாக இருப்பதை பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இச்சம்பவம் வெள்ளமடை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.block_B
மேலும்
-
குமாரபாளையம் தி.மு.க., வேட்பாளர் பாலுவை ஆதரித்து கனிமொழி எம்.பி., பிரச்சாரம்
-
மைக் இடைப்பாடியை போல் உள்ளது:கனிமொழி கிண்டல்
-
'டபுள் டெக்கர்' பஸ்சில் 800 பேர் மட்டுமே பயணம்
-
நாமக்கல் வேட்பாளர்களுக்கு 3 நாள் செலவு கணக்கு பராமரிப்பு கூட்டம்
-
50 ஆண்டுகால விவசாயிகளின் போராட்டம் 800 பேருக்கு பட்டா வழங்கி தி.மு.க., சாதனை
-
நாமக்கல் நீதிமன்றங்களில் சமரச மைய வார திருவிழா