பிளஸ் 2 நடைமுறை பத்தாம்வகுப்புக்கும் பின்பற்றப்படுமா: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் எதிர்பார்ப்பு
மதுரை: மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் பின்பற்றப்படும் நடைமுறை பத்தாம் வகுப்புக்கான முகாம்களிலும் தொடர வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்கள் சவுராஷ்டிர பெண்கள், நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கின்றன. 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள இம்முகாம் ஏப்.,7 துவங்கி, 20 வரை நடக்கிறது. இதில் பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்களின் இருப்பிடத்தில் இருந்து எந்த மையம் அருகில் உள்ளதோ அங்கு சென்று திருத்தும் பணியில் ஈடுபடலாம் என முகாம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசிரியர்கள் விரும்பிய மையத்தை தேர்வு செய்து உற்சாகமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் முகாம்கள் சவுராஷ்டிரா ஆண்கள், திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் பள்ளியில் ஏப்.,10 முதல் 21 வரை நடக்கிறது. இப்பணிகளில் பாடவாரியாக 1200 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். திருமங்கலம் முகாமில் இருந்து ஆசிரியர்களுக்கான பணிஒதுக்கீடு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் பெயருடன், முகாம் இடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தொலைதுாரத்தில் வீடுகள் உள்ள ஆசிரியர்கள் பல கிலோ மீட்டர் துாரம் பயணித்து முகாம்களில் பங்கேற்கும் சூழல் எழுந்தள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், பிளஸ்2 முகாம்களில் 'ஆசிரியர்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள முகாம்களை தேர்வு செய்யலாம்' என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதுபோல் பத்தாம் வகுப்பு முகாமிற்கு உத்தரவிட வேண்டும். வெயில் காலம் என்பதால் ஆசிரியர்கள் பல கிலோ மீட்டர் துாரம் பயணிக்கும் நிலையை தவிர்க்க சி.இ.ஓ., தயாளன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.