மேற்கு தொகுதியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள்: வேட்பாளர் செல்லுார் ராஜூ பெருமிதம்
மதுரை: மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட மாடக்குளம், பொன்மேனி பகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் செல்லுார் ராஜூ பிரசாரம் செய்தார். நிர்வாகி எம்.எஸ். பாண்டியன், ஜெயபால், பகுதி செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் குமார், மாணவரணி பார்த்திபன், வட்ட செயலாளர் கண்ணன், பா.ஜ., பாலகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செல்லுார் ராஜூ பேசியதாவது: இப்பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. பழங்காநத்தம் அரசு மருத்துவமனை விரிவாக்கம் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்டது. மாடக்குளம் கண்மாய் பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. எத்தனையோ திட்டங்கள் மேற்கு தொகுதியில் செய்திருக்கிறேன். முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்து 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் கொண்டு வந்தேன். 2019 - 2021 வரை 20 சதவீதம் பணி முடித்து விட்டோம்.
தி.மு.க., ஆட்சியில் இந்த பணியை முழுதாக முடிக்கவில்லை. எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுங்கள். தங்கு தடையின்றி தண்ணீர் கொண்டு வருவேன். இப்பகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பெற்றுத்தரப்படும். காட்டுநாயக்கர், மலைவேடன் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்வேன். இந்த ஆட்சியில் 2 வயது பெண் குழந்தைகள் முதல் 80 வயது மூதாட்டிகள் வரை வன்கொடுமை செய்யப்படுகின்றனர். விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ரூ.10 ஆயிரம், பிரிட்ஜ், மகளிர் டூவீலர் வாங்க மானியம், குலவிளக்கு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் என தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார்.