தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க., இடையேகடும் போட்டி: கடந்த தேர்தலில் கோட்டை விட்டதையும் பிடிக்க தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில், உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் போட்டி போட்டு கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்துள்ளது.

இத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளும், தி.மு.க., கூட்டணியில் காங்., - தே.மு.தி.க., - வி.சி., உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்று பிரசார களத்தில் உள்ளன. அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள், நா.த.க., மற்றும் த.வெ.க., தனித்து போட்டியிடுவதால், நான்குமுனை போட்டி நிலவுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானுார் (தனி) ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில், விழுப்புரம், வானுார் (தனி) தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், திருக்கோவிலுார், செஞ்சி, மயிலம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி) தொகுதிகளில் தி.மு.க.,வும் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் கோட்டைவிட்ட தொகுதிகளை கைப்பற்றவும், சிட்டிங் தொகுதிகளை தக்க வைக்கவும் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் தீவிரம் காட்டினர். அந்த தேர்தலில், விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, செஞ்சி தொகுதிகளில் தி.மு.க.,வும், மற்றும் மயிலத்தில் பா.ம.க.,வும், திண்டிவனம் (தனி), வானுார் (தனி) தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்றது.

அப்போது, சிட்டிங் தொகுதிகளாக இருந்த விழுப்புரத்தை அ.தி.மு.க.,வும், மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளை தி.மு.க.,வும் கோட்டைவிட்டது. இதனால், தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், கடந்த தேர்தலில் கோட்டைவிட்ட மற்றும் சிட்டிங் தொகுதிகளை மாவட்டத்தில் எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்று முழு வீச்சில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

அதிலும், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடும் விழுப்புரம், திருக்கோவிலுார், வானுார் (தனி) தொகுதிகளில் அக்கட்சியினர் பம்பரமாக சுற்றி போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, விக்கிரவாண்டி, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி) தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களும், தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அந்த தொகுதிகளையும் கைப்பற்ற, அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
...-நமது நிருபர்-

Advertisement