தர்மபுரியில் தே.மு.தி.க., பிரேமலதா பிரசார

தர்மபுரி : தர்மபுரி சட்டசபை தொகுதி, தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, நேற்று தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, பிரசார வேனில் இருந்தபடி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த, 5 ஆண்டுகால ஆட்சியிலிருந்த, தி.மு.க., தலைமையிலான அரசு, குறிப்பாக, பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், வங்கி கடனுதவி திட்டம், மாணவ, மாணவியருக்கு புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அதேபோல, நடக்கவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அந்த வாக்குறுதிகளுடன் தர்மபுரி தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., வேட்பாளராக களத்தில் உள்ள வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
வெற்றி பெற்றதும், காவிரி உபரி நீர் திட்டம், தர்மபுரி டவுனில், 2 இடங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள கட்டமைப்புடன் கூடிய பூங்கா அமைக்கப்படும். சனத்குமார் ஆறு துார்வாரி சீரமைக்கப்படும். அதியமான்கோட்டை முதல் பழைய தர்மபுரி வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். தர்மபுரியில் நிரந்தர நெல்கொள்முதல் நிலையம் ஏற்படுத்தப்படும். நல்லம்பள்ளி தாலுகாவில் சார் பதிவாளர் அலுவலகம் ஏற்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள, 8,000 ரூபாய் கூப்பன் திட்டத்தின் மூலம், பெண்கள் வீட்டு உபயோக பொருள்களை வாங்கி கொள்ள முடியும்.
இவ்வாறு பேசினார்.

Advertisement