கடலில் கொழுஞ்சி செடிகளை அமைக்க முடிவு :தடை காலத்தில் மீன் வளத்தை பெருக்க முயற்சி

தொண்டி: தொண்டி பகுதியில் மீன்பிடி தடைக்காலம் துவங்க இருக்கும் நிலையில் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் கொழுஞ்சி செடிகளை சேகரித்து கடலில் அமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் துவங்க உள்ளது. தடைக்கால முன்னேற்பாடாக மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு அரசு மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்துகிறது. இந்த தடைக்காலத்தை வெறும் ஓய்வு நாட்களாக கருதாமல் மீன்வளத்தை அடுத்த பருவத்திற்கு வளப்படுத்த தொண்டி பகுதி மீனவர்கள் கொழுஞ்சி செடிகளை சேகரித்து கடலில் போடும் பணிகளை துவங்கியுள்ளனர்.

செயற்கை பவளப்பாறைகள் போன்று இந்த கொழுஞ்சி செடிகள் சிறந்த இடமாக அமைகின்றன. இப்பகுதி மீனவர்கள் அருகில் உள்ள மேட்டு நிலங்களில் வளரும் கொழுஞ்சி செடிகளை வெட்டி அவற்றை கட்டாக கட்டி படகுகளில் கடலுக்கு எடுத்து சென்று மீன்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் கடலுக்குள் மூழ்க செய்கின்றனர். இது குறித்து தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:

பல தலைமுறைகளாக நாங்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறோம். கொழுஞ்சி செடிகளை நடுவதால் மீன்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு மற்ற இடங்களை விட அதிகம். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்லும் போது அந்த இடங்களில் மீன்வரத்து அதிகமாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். இச்செடிகள் மீன்வளத்தை பெருக்குவதோடு எங்கள் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கிறது.

இந்த கொழுஞ்சி செடிகள் அமைப்பதன் மூலம் மீன்கள் முட்டையிட்டு பாதுகாப்பாக வளர்வதற்கு ஒரு புகலிடமாக அமைகிறது என்றனர். தொண்டி கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆர்வத்துடன் கொழுஞ்சி செடிகளை வெட்டும் பணியிலும், அவற்றை படகுகளில் ஏற்றிச் சென்று கடலுக்குள் அமைக்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

--

Advertisement