விஞ்ஞானிகள் இன்றி கடலோர உவர் ஆராய்ச்சி மையம்  களையிழந்தது;  காலி பணியிடங்களை நிரப்ப விவசாயிகள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் பல்கலை கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் வேளாண் விஞ்ஞானிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் புதிதாக பயிர் சாகுபடி பணி மற்றும் கோழிகள் வளர்ப்பு மையம், நர்சரி வளர்ப்பு பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2003ம் ஆண்டு முதல் கடலோர உவர் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வளரும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் சாகுபடி செய்து, அதற்குரிய தொழில் நுட்பத்துடன் விவசாயிகள் சாகுபடி செய்து பயன் பெற ஆலோசனை வழங்குகின்றனர்.

வளாகத்தில் கோழிகள் வளர்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உயர்தர நாட்டுக்கோழிகள் வளர்த்து மக்கள், விவசாயிகளுக்கு கோழி மற்றும் முட்டைகள் விற்கப்பட்டது. பழ வகைகள், மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு குறைந்த விலையில் விற்கின்றனர். இந்நிலையில் கடலோர உவர் ஆராய்ச்சி மையம் வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் நிலையிலான விஞ்ஞானிகள் பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளது.

இதனால் இம்மையத்தில் ஆய்விற்காக பெயரளவில் மட்டுமே பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பயிற்சி வகுப்புகள், தொழில் நுட்ப ஆலோசனை பெற வரும் விவசாயிகள் உதவிப் பேராசிரியர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆரம்ப கட்டத்தில் தலைவர், 6 வேளாண் விஞ்ஞானிகள், கண்காணிப்பாளர், அலுவல உதவியாளர்கள் என 13 பேருடன் செயல்பட்ட கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் தற்போது இரு அலுவலர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.

மேலும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு குயவன்குடியில் உள்ள வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இம்மையம் பெயரளவில் செயல்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே நடப்பாண்டிலாவது கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் நிரந்தரமாக வேளாண் உதவிப்பேராசிரியர்கள் நியமிக்க சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

--------------

Advertisement