அ.தி.மு.க., மாஜிக்கள் வெற்றிக்கு சசிகலா வேட்பாளர்களால் சிக்கல்

3

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில்,அவர்களின் வெற்றிக்கு, சசிகலா ஆதரவு வேட்பாளர் களால், சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

சட்டசபை தேர்தலில், தனக்கு துரோகம் செய்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களின் வெற்றியை பறிக்க, சசிகலா வியூகம் அமைத்துள்ளார். அந்த தொகுதிகளில், தனது அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.

அவருடன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அணி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கூட்டணி அமைத்துள்ளன. தென் மாவட்டங்களில், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் அதிகம் உள்ள தொகுதிகளில், தனது ஆதரவாளர்களான அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளார்.

திண்டுக்கல் - முன்னாள் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து ராமுத்தேவர்

மதுரை திருமங்கலம் - முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்த்து ஜீவிதா நாச்சியார்

திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பாவை எதிர்த்து தனபாண்டியன்

மன்னார்குடி - ராஜமாணிக்கத்தை எதிர்த்து ராசுப்பிள்ளை.

திருமங்கலம் தொகுதியில் உதயகுமார், வீடு வீடாக பாத்திரங்கள் வழங்கியதுபோல் ஜீவிதா நாச்சியாரும் வழங்கியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில், தனது ஆதரவாளர் தனபாண்டியனுக்கு ஆதரவாக, சசிகலா பிரசாரம் செய்தது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

மன்னார்குடி வேட்பாளர் ராசுப்பிள்ளைக்கு, சசிகலாவின் தம்பி திவாகரன் தலைமையில், கள்ளர் சமுதாயத்தினர் தேர்தல் பணி செய்து வருகின்றனர். இதனால், படுத்தபடியே வெற்றி பெறுவேன் என, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். நன்னிலம், மதுரை மத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராஜபாளையம், மேலுார், முதுகுளத்துார், ஆண்டிப்பட்டி, சங்கரன்கோவில், நாங்குநேரி உள்ளிட்ட சில தொகுதிகளில் சசிகலா ஆதரவு வேட்பாளர்கள், கணிசமான ஓட்டுகளைப் பெற்றால், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும்.

இது, அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா வாழ்வா, சாவா என்ற அடிப்படையில் தேர்தலை சந்திப்பதால், களத்தில் போட்டி பலமாக உள்ளது.

Advertisement