'எங்களையே மிஞ்சிட்டீங்க சாமி' கோஷ்டியால் மிரண்ட கோயல்

5

'கோஷ்டி பூசலில் மஹாராஷ்டிராவையே மிஞ்சி விட்டீர்கள்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் வருத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில், 27 தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடுகிறது. பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை வாங்காமல், கட்சியே இல்லாத தி.மு.க.,வின்கோட்டை எனப்படும் தொகுதிகளை வாங்கியதாக, கட்சிக்குள் பூகம்பம் வெடித்தது.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போதும் பிரச்னை வெடித்தது. அண்ணாமலை, அவரது ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என, சமூக வலைதளங்களில், பா.ஜ.,வினரே அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சென்னையிலேயே முகாமிட்ட தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், அதிருப்தியில் இருந்த மாநில இளைஞரணித் தலைவர் சூர்யா உள்ளிட்டோரின் வீடுகளுக்கே சென்று சமாதானப்படுத்தினார்.

மாநிலப் பொதுச்செயலர்ஏ.பி.முருகானந்தம், மாநில துணைத் தலைவர்கள் டால்பின் ஸ்ரீதரன், ம.வெங்கடேசன், மாநிலச் செயலர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார்.

ஒரு வாரத்திற்கு மேலாக, தமிழகத்தில் முகாமிட்டு, கட்சி நிர்வாகிகளை சந்தித்த பீயூஷ் கோயல், 'என் சொந்த மாநிலமான மஹாராஷ்டிரா பா.ஜ.,வில் கோஷ்டிகள் அதிகம். மாநில அளவில் மட்டுமல்லாது, மாவட்ட அளவிலும் கோஷ்டிகள் இருக்கும். அங்கு பா.ஜ., ஆட்சியில் இருப்பதாலும், வலுவான ஓட்டு வங்கி இருப்பதாலும், கோஷ்டிகளால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை.

'தமிழகத்தில் பா.ஜ., வளரும் கட்சி. ஆனாலும், மஹாராஷ்டிராவை விட அதிக கோஷ்டிகள் உள்ளன. கோஷ்டி பூசலில் எங்களையே மிஞ்சி விட்டீர்கள்' என வருத்தத்துடன் கூறியதாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement