தலைமை கூட்டுறவு வங்கி வணிகம்: ரூ.50,000 கோடியை தாண்டியது 

சென்னை:தமிழக அரசின் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மொத்த வணிகம், முதல் முறையாக, 50,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு, சென்னையில், 51 கிளைகள் உள்ளன. இது, நகை கடன், சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட, பல்வேறு பிரிவுகளில் கடன்களை வழங்குகிறது. தேசிய மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு இணையாக, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

இதனால், வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதையடுத்து, கடந்த, 2025 - 26ம் நிதியாண்டில், தலைமை கூட்டுறவு வங்கியின் மொத்த வணிகம் முதல் முறையாக, 50,000 கோடி ரூபாயை தாண்டி, 50,196 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், வங்கி திரட்டிய டிபாசிட், 15,489 கோடி ரூபாயாகவும், வழங்கிய கடன்கள், 34,707 கோடி ரூபாயாகவும் உள்ளன.

கடந்த, 2024 - 25ல் மொத்த வணிகம், 41,437 கோடி ரூபாயாக இருந்தது. 2025 - 26ல் வங்கியின் நிகர லாபம், 400.65 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 165.28 கோடி ரூபாயாக இருந்தது.

***

Advertisement