திருநெல்வேலி மாவட்டத்தில் 12.65 லட்சம் வாக்காளர்கள்: கலெக்டர் தகவல்

திருநெல்வேலி;திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 12 லட்சத்து 65 ஆயிரத்து 302 வாக்காளர்கள் உள்ளனர். பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய 462 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் குற்றச்செயலில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி பெறப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அவர் கூறியதாவது:

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தப்பணிகளுக்குப் பின், மொத்தம் 12,65,302 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,16,911 பேர், பெண்கள் 6,48,245 பேர், மூன்றாம் பாலினத்தவர் 146 பேர் .

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 6,027 பேர் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக ஏப்.12 முதல் 14 வரை 75 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று ஓட்டுப்பதிவு நடத்த உள்ளனர். இதற்காக 358 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 758 மையங்களில் 1,678 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் நேரடி ஒளிபரப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத 3 ஓட்டுச்சாவடிகளில் முழுமையான கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்படும். மேலும் 298 பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் 8,056 அரசு பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பிற்காக 2,056 போலீசார், 664 மத்திய ஆயுதப்படையினர், 894 ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் 9 குழுக்கள் வீதம் 45 பறக்கும் படைகள் மற்றும் 45 நிலையான கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.74,42,433 மதிப்பிலான ரொக்கம், மதுபானம், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 221 வழக்குகள், நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வழிகாட்டி கையேடு ஏப்.12 முதல் 18 வரை வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ள 506 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 422 போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏப்.23 அன்று நடைபெறும் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தவறாமல் பங்கேற்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

Advertisement