10 ஆண்டுகளாக நிரப்ப படாத தூய்மை பணியாளர்கள்:குப்பையால் நிரம்பி வழியும் ஊராட்சிகளால் மக்கள் பாதிப்பு
சிவகாசி:மாவட்டத்தில் ஊராட்சிகளில் 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத துாய்மை பணியாளர்கள் பணியிடங்களால் கிராமங்களில் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக புதிதாக துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப் பணியை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் துாய்மை பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை துாய்மை பணியாளர்கள் பணியிடங்கள் காலியானால் உடனடியாக அவ்விடம் நிரப்பப்பட்டது. தற்போது துாய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவ்விடத்தில் புதிதாக யாரையும் பணியமர்த்த வில்லை. இதனால் ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகள் கேள்விக்குறியாகிறது. வாறுகால் துார்வாராமலும், குப்பை வாங்க ஆட்கள் இல்லாமலும் ஒவ்வொரு ஊராட்சியும் சுகாதாரத்தில் பின்தங்கி உள்ளது. வருமானம் அதிகம் உள்ள ஒரு சில முதல் நிலை ஊராட்சிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆட்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் ஓரளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் மற்ற ஊராட்சிகளில் அதற்கு வழி இல்லை.
மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டாலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை என கை விரிக்கின்றனர். சுகாதாரத்தை வலியுறுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் ஊராட்சிகளில் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அலைகின்றனர்.
சிவகாசி பள்ளபட்டி ஊராட்சியில் 28 உட் கிராமங்கள் உள்ளன. ஆனால் இங்கு ஆறு துாய்மை பணியாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இவர்களால் முழுமையாக துாய்மை பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதே நிலைதான் பல்வேறு ஊராட்சிகளிலும் உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே அனைத்து ஊராட்சிகளிலும் காலிப் பணியிடங்களில் துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
-
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை