தேர்தல் புறக்கணிப்பு கூட்டத்தில் மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தொழிலாளி உயிரிழந்தார்.

திருநெல்வேலி தாழையூத்து தாதனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் காவுமுத்து 55. குவாரியில் வேலை பார்த்தார். தாதனூத்து கிராமத்தில் அனுமதி அற்ற குவாரிகள் செயல்படுவதால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் குவாரிகளில் பணியாற்றுவோர் தேர்தல் புறக்கணிப்பை விரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர் நேற்று முன்தினம் தாதனூத்து கிராமத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு தரப்பினர் ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் எதிராகவும் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் காவுமுத்துவை சிலர் நெஞ்சில் கைவைத்து தள்ளினராம்.

ஏற்கனவே இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த காவுமுத்துவுக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகிலிருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவரை பிடித்து கீழே தள்ளியதாக ஆனந்தை தாழையூத்து போலீசார் கைது செய்தனர் .

Advertisement