மின்மாற்றி கொள்முதல் டெண்டர் அரசுக்கு இழப்பு எதுவும் இல்லை ஐகோர்ட்டில் மின் வாரியம் தகவல்

சென்னை: 'மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான டெண்டர்களில் அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

'தமிழகத்தில், 2021 - 23ம் ஆண்டுகளுக்கு இடையில், 45,800 மின்மாற்றிகள் கொள்முதலுக்கு, 1,182.88 கோடி ரூபாய் மதிப்புக்கு 'டெண்டர்' கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், அரசுக்கு 397 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

'இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என, அறப்போர் இயக்கமும், அ.தி.மு.க., நிர்வாகி சரவணன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது மின் வாரியம் தரப்பில், 'கொள்முதலில் அரசுக்கு, 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. டெண்டர் வெளிப்படைத் தன்மை சட்டத்தை பின்பற்றியே கொள்முதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்ய, எந்த ஆதாரங்களும் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், 'மின்மாற்றி கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ததில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறை வாதங்களை முன்வைப்பதற்காக, விசாரணையை 15ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement