பிரதானக் கட்சி வேட்பாளர்களின் பிரசாரம்... கவருமா? 'கண்டுகொள்ளாமல்' கடக்கும் வாக்காளர்கள்
திருப்பூர்:இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், நான்குமுனைப் போட்டி களைகட்டியுள்ளது. வேட்பாளர்களும், கட்சியினரும் தங்கள் பிரசார யுத்தியை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக, உள்ளூர்ப்பிரச்னைகள் குறித்து ஆழமான பார்வையுடன் வேட்பாளர்கள் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு, வாக்காளர் மத்தியில் எழுந்துள்ளது.
கொளுத்தும் வெயிலையும் மிஞ்சும் வகையில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. கூட்டணி; அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி; த.வெ.க.; நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதுமே, களமே பிரதானமாக வேட்பாளர்கள் மூழ்கியுள்ளனர்.
தி.மு.க. கூட்டணி
ஆளும் கட்சியான தி.மு.க. தரப்பில் மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட தற்போதைய நலத்திட்டங்களே பிரசாரத்தின் மையப்பொருளாக உள்ளன. இவை மீண்டும் தொடரும்; உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளையும் அக்கட்சியினர் மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். அரசின் இந்தத் திட்டங்கள் அடித்தட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதால், அது தங்களுக்குச் சாதகமாக அமையும் என தி.மு.க.வினர் நம்புகின்றனர்.
பல்லடம், காங்கயம் பகுதியில் பிரசாரம் செய்த, தி.மு.க. - எம்.பி. கனிமொழி, உள்ளூரில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று உறுதி கூறினார். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர், இனி வருகை தர உள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி
பா.ஜ. தரப்பில் இந்த முறை பிரசாரம் ஆக்ரோஷமாகத் தொடங்கப்பட்டுள்ளது. அவிநாசி தொகுதியில் மத்திய அமைச்சர் முருகன் போட்டியிடுவதால் தேசியத் தலைமையின் நேரடி கவனம் திருப்பூர் பக்கம் திரும்பியுள்ளது. திருப்பூரில் நேற்றுமுன்தினம் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, மத்திய அரசின் கடந்த ஐந்தாண்டு சாதனைகளை முன்வைத்துப் பிரசாரம் செய்தார். தி.மு.க. அரசின் மீதான விமர்சனங்களை அவர் முன்வைத்த விதம் களத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்திற்கு மத்திய அரசு செய்த திட்டங்களையும் புள்ளிவிவரங்களுடன் அண்ணாமலை பட்டியலிட்டார். தேசிய அளவிலான சாதனைகள் உள்ளூர் மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில் வரும் 16ல் திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்லடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
த.வெ.க. - நாம் தமிழர்
த.வெ.க. வேட்பாளர்களைப் பொறுத்தவரை விஜயை மையப்படுத்தி பேசுகின்றனர். இருப்பினும் விஜய் நேரடியாக களத்துக்கு வந்தால், பிரசாரம் களைகட்டும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் ஏற்கனவே பிரசாரம் செய்துவிட்டார். தேர்தல் அறிக்கையை மையமாக வைத்து வேட்பாளர்கள் அனல் தெறிக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
எழும் விமர்சனங்கள்
தொகுதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பெரிய அளவில் விவாதிக்கப்படுவதில்லை என்ற விமர்சனமும் எழாமல் இல்லை. குறிப்பாக சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், சாலை மற்றும் குடிநீர் மேம்பாடு போன்ற உள்ளூர் சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்து அனைத்துத் தரப்பு வேட்பாளர்களுமே இன்னும் விரிவாகப் பேச வேண்டும்; தற்போது வரை பலரது பிரசாரம் உப்புச்சப்பில்லாததாகவே உள்ளது. இதனால், அதை மக்கள் ரசிப்பதில்லை என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது. வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கைக்கொண்டுள்ள வேட்பாளர்கள், பிரசார வியூகத்தை இதற்கேற்ப கட்டமைத்தால்தான் வெற்றி கைகூடும் வாய்ப்பு உள்ளது.
---
@block_B@ தி.மு.க.வினர் தன்னிச்சை கூட்டணி கட்சியினர் குமுறல் தி.மு.க கூட்டணியில், வேட்பாளர் அறிமுகக் கூட்டங்கள் பல இடங்களில் முறையாக நடக்காததுடன், குறிப்பாக அவிநாசி போன்ற முக்கியத் தொகுதிகளில் தி.மு.க.-வினர் தன்னிச்சையாகச் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரை அரவணைத்துச் செல்வதில் தொய்வு நிலவினாலும், கூட்டணி என்ற பொறுப்புணர்வோடு வேட்பாளருக்காகப் பணியாற்றி வருகிறோம் எனத் தோழமைக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.block_B
மேலும்
-
மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு: பிற இடங்களுக்கு அனுப்பும் பணி நிறுத்தம்
-
தமிழகத்திற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: பா.ஜ., ராமஸ்ரீநிவாசன் கண்டனம்
-
பூ மார்க்கெட் விவகாரத்தில் தேர்தல் விதி மீறலா ?
-
திருப்புவனத்தில் ஹைபிரிட் வெள்ளரி சாகுபடி: நவீன தொழில்நுட்பத்தில் சாதிக்கும் விவசாயி
-
திருவாசகம் முற்றோதல் சிவனடியார்கள் உருக்கம்
-
இறந்தவர்கள், ஜெயிலுக்கு போனஆசிரியர்களுக்கு தேர்தல் பணி உத்தரவு: 'ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி