தமிழகத்திற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: பா.ஜ., ராமஸ்ரீநிவாசன் கண்டனம்

மதுரை: ''தமிழகத்திற்கு நல்லது நடப்பதை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை'' என மதுரையில் பா.ஜ., பொதுச்செயலாளரும், தெற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளருமான ராமஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

மக்கள் ஆதரவை இழந்த மக்களிடம் வெறுப்பு, கோபத்தை சம்பாதித்த தி.மு.க., இந்த தேர்தலில் பணத்தை நம்பி களம் இறங்குகிறது. எனவே தி.மு.க.,வினர் பணத்தை எங்கே பதுக்கி வைத்துள்ளனர், பட்டுவாடா செய்கின்றனர் என்பதை தமிழகத்திற்கு கூடுதல் அலுவலர்களை நியமித்து கண்காணித்தால் தான் தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

மதுரை வந்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் 'பா.ஜ., வெற்றி பெற்றால் மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவேன்' என்றார். மெட்ரோ திட்டத்தை நாக்பூருக்கோ, புனேக்கோ கொண்டு போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. தமிழக முதல்வரால் செய்ய முடியாததை மகாராஷ்டிரா முதல்வரால் செய்ய முடியும் என்றால் அதை ஸ்டாலின் வரவேற்றிருக்க வேண்டும். இதை சொல்லாமல் கண்டிக்கிறார் என்றால் தமிழகத்திற்கு நல்லது நடக்கக்கூடாது என நினைக்கிறார். சரியான தரவுகளைக் கொடுத்து மதுரைக்கு மெட்ரோ ரயிலை வாங்க இவர்களுக்கு துப்பில்லை.

தி.மு.க.,வின் அடுத்த வாரிசு யார் என மத்திய அமைச்சர் பீயூஷ்கோயல் கேட்ட கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. தேர்தல் வரை ஸ்டாலின் தான் முதல்வர் என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் முதல்வர் பதவியை உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்து மாற்றப் போகிறார்களா.

சல்மாவுக்கு கண்டனம்





தி.மு.க., எம்.பி., சல்மா, பாகிஸ்தானை வெளிப்படையாக புகழவேண்டிய அவசியம் என்ன வந்தது. சிறுபான்மையரின் ஓட்டு வங்கியை மனதில் வைத்து தேர்தல் நேரத்தில் பேசுவதா. பாகிஸ்தானை புகழ்ந்து பேசியதன் மூலம் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் தேசபக்தியை கொச்சைப்படுத்துகிறார். மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசின் நிதிப்பகிர்வு மாநிலங்களுக்கு 22 சதவீதமாக இருந்தது. பிரதமர் மோடி அதை 42 சதவீதமாக அதிகரித்தார். அதிக பலன்பெற்ற மாநிலம் தமிழகம் தான். அதாவது மானியம், திட்டங்கள் மூலம் மத்திய அரசு கொடுத்தது ரூ.14 லட்சம் கோடி. மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளார் மோடி. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் கூட 3 துறைமுகம் இல்லை. தமிழகத்தில் தான் எண்ணுார், சென்னை, துாத்துக்குடி துறைமுகங்கள் உள்ளன. இதில் தமிழகம் எங்கே ஒதுக்கப்பட்டது, வளர்ச்சி தடைபட்டது என ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

தேர்தல் ஊடகப்பிரிவு மாநில பார்வையாளர் சசிராமன், விவசாய அணித்தலைவர் நாகராஜ், தேசிய பார்வையாளர் துகித் சின்ஹா உடனிருந்தனர்.

Advertisement