ஐ.டி., நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை: 6 'டீம் லீடர்'கள் உட்பட ஏழு பேர் அதிரடி கைது

நாசிக்: மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள முன்னணி ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் மத ரீதியிலான துன்புறுத்தல் புகாரில், ஆறு 'டீம் லீடர்'கள் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையின் பெண் அதிகாரி ஒருவர் என, மொத்தம் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் நாசிக்கில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என, மொத்தம் ஒன்பது பேர் சமீபத்தில் போலீசில் புகார் அளித்தனர்.

இதில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களின் மேலதிகாரிகளாக உள்ள டீம் லீடர்கள் மூலம், பாலியல் துன்புறுத்தல்கள், உடல் மற்றும் உடை குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள், மத ரீதியிலான விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மனித வளத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தனித்தனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.

இதன்படி, அவர்களின் டீம் லீடர்களாக செயல்பட்ட ஆசிப் அன்சாரி, ஷாபி ஷேக், ஷாருக் குரேஷி, ரஸா மேமன், தவுஷிப் அத்தார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், பணியாளர்கள் அளித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவற்றை மூடி மறைத்த பெண் மனிதவள அதிகாரியையும், போலீசார் கைது செய்தனர். இவர், புனேவை மையமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின், மனிதவளப் பிரதிநிதியாகப் பணியாற்றியவர்.

இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் உத்தரவின்படி, உதவி போலீஸ் கமிஷனர் சந்தீப் மிட்கே தலைமையில் சிறப்பு புலானாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement