11 நாட்களில் இரட்டிப்பாகும் பணம்: பேராசையில் ரூ.12 கோடி இழந்த டாக்டர்
புனே: 'பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு பணம் கிடைக்கும்' என ஆசை காட்டி, புனே டாக்டரிடம் 12 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த 75 வயதான டாக்டர் ஒருவருக்கு, கடந்த ஜனவரியில் புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
அதில், 'தங்களிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் தொகை, 11 நாட்களில் இரு மடங்காக திரும்ப கிடைக்கும்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
அத்துடன் ஒரு 'லிங்க்' அனுப்பப்பட்டு இருந்தது. அந்த,'லிங்க்'கை தொட்டதும் டாக்டரின் எண், ஒரு 'வாட்ஸாப்' குரூப்பில் இணைக்கப்பட்டது. அந்த குரூப்பில் இருந்த உறுப்பினர்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து இரு மடங்கு லாபம் பெற்றதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரபல பங்கு சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான போலி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் அந்த கும்பல் அனுப்பியது. அவர்களது பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வைக்கும்படி தெரிவித்திருந்தது.
இதை நம்பி, மார்ச் 7 முதல் மார்ச் 18 வரையிலான காலத்தில், மொத்தம் 12.31 கோடி ரூபாயை டாக்டரிடம் இருந்து அந்த கும்பல் அபகரித்தது. இந்த முதலீட்டின் மூலம் 54 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த பணத்தை எடுக்க முயன்ற டாக்டரை மிரட்டிய கும்பல், மேலும் பணத்தை முதலீடு செய்யும்படி அழுத்தம் கொடுத்தது. இதனால், சந்தேகமடைந்த டாக்டர், சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை டாக்டர் உணர்ந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, 12 கோடி மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஸ்ரீ வினோத் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயிற்சிக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பும் பணி
-
வாரம் ஒரு முறை மோடி வருகிறார் நிதி வரவில்லை: உதயநிதி கிண்டல்
-
பா.ஜ., நகர தலைவரை திட்டிய மகளிரணி தலைவி மீது வழக்கு
-
மேற்காசியா போர் : அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி ஆலோசனை
-
போலீஸ் செய்திகள்: இளைஞர் தற்கொலை