உதயநிதியை போல் பழனிசாமிக்கும் போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் அவதி

சென்னை: துணை முதல்வர் உதயநிதி பிரசாரத்தின் போது வாகனங்கள் நிறுத்தப்பட்டதுபோல், நேற்று பழனிசாமி பிரசாரத்திற்காக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் ஆதிராஜாராமை ஆதரித்து, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் நேற்று காலை, 10:30 மணி அளவில் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.

இதனால், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் சிரமப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்களில் சென்றவர்கள், நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த சந்துக்களில் சென்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இம்மாதம், 2ம் தேதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் உதயநிதி வேட்புமனு தாக்கல் செய்ததற்காக, பெசன்ட் நகர் சாலையில் ஊர்வலமாக சென்றார்.

இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலர் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், 'மக்களுக்கு இடையூறு செய்வதில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது' என, புலம்பி தள்ளினர்.

Advertisement