வாக்காளர்களின் மொபைல் போனை பத்திரமா திருப்பி கொடுத்த தேர்தல்துறை

புதுச்சேரி: மொபைல்போனுடன் ஓட்டுச்சாவடிக்குள் வந்த வாக்காளர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான். ஆனால், இந்த முறை ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முயன்ற வாக்காளர்களுக்கு ஒரு சிறிய செக் வைக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் அதிகாரிகள் தவிர மற்ற யாரும் ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து முன்னரே அறிவிப்புகள் வெளியானாலும், பழக்கதோஷத்தில் பலரும் பாக்கெட்டிலும் கைகளிலும் மொபைல்போன்களுடன் வந்து விட்டனர். ஓட்டுச்சாவடி நுழைவாயிலிலேயே நின்றிருந்த பாதுகாப்புப் படையினர், மொபைல்போனை இங்கே கொண்டு போகக் கூடாது என்று கறாராகச் சொல்ல, வாக்காளர்கள் சற்றுத் திகைத்துப் போயினர்.

வாக்காளர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்ட தேர்தல் துறை, வாசலிலேயே ஒரு சூப்பர் ஏற்பாட்டைச் செய்திருந்தது.

மொபைல் போன்களுடன் வந்தவர்கள் அங்கிருந்த தன்னார்வலர்களிடம் அனுப்பப்பட்டனர். வாக்காளர்கள் தங்கள் போன்களை அவர்களிடம் ஒப்படைக்க, அதற்கு ஈடாக ஒரு டோக்கன் வழங்கப்பட்டது.

ஓட்டுப் போட்டுட்டு வாங்க... பத்திரமா போனை வைத்திருந்து தர்றோம் எனத் தன்னார்வலர்கள் இன்முகத்துடன் போன்களைப் பராமரித்தனர்.

ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு வந்த வாக்காளர்கள், தங்களது டோக்கனை கொடுத்து, மொபைல் போன்களைத் திரும்பப் பெற்றுச் சென்றனர்.

Advertisement