நெல் கொள்முதல் நிலையத்தில் மூடைகள் தேக்கம்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் நான்கு மாதங்களாகியும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்காமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 10 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அரசுக்கு விற்றால் நியாயமான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் விளைவித்த நெல்லை மூடையாக கொண்டு வந்து ஒப்படைத்தனர். விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்ட போதும், நெல் மூடைகளை ஆலைகளுக்கு அனுப்பாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அரசூர் உட்பட சில நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆயிரம் நெல் மூடைகள் தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட மூடைகள் அரிசி ஆலைகளுக்கு உடனே கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 4 மாதங்களாகியும் மூடைகள் அதே இடத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வெட்ட வெளியில் தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளதால் மழையில் நனைகிறது. வெயிலால் மூடைகளில் வெப்பம் அதிகரித்து பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது:

நெல் மூடைகளை காரைக்குடி அருகே பள்ளத்துார் மற்றும் துாத்துகுடி போன்ற அரிசி ஆலைகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். ஆனால் அரசு நிர்ணயம் செய்துள்ள லாரி வாடகை மிகவும் குறைவாக உள்ளது. அந்த வாடகைக்கு லாரி உரிமையாளர்கள் வர மறுக்கிறார்கள். விரைவில் மாற்று ஏற்பாடு செய்து மூடைகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். விவசாயிகள் கூறியதாவது:

நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல் அரிசியாகி ஏழைகளின் பசி போக்க பயன்படும் என்று நினைத்தோம். ஆனால் மூடைகள் முளைப்பு தன்மையை பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நெல் மூடைகளை ஆலைகளுக்கு அனுப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

---

Advertisement