ரயில்வே திட்டங்களுக்கு சித்தராமையா இடையூறு: சோமண்ணா குற்றச்சாட்டு

மாண்டியா: ''கர்நாடகாவில் முக்கியமான ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் சித்தராமையா முட்டுக்கட்டை போடுகிறார்,'' என, ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா குற்றம் சாட்டினார்.

மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி;

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கனகபுரா - மலவள்ளி ரயில்பாதை திட்டத்தை கையில் எடுத்தோம்.

ஆனால், முதல்வர் சித்தராமையா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, 'எங்களிடம் பணம் இல்லை. இந்த திட்டம் வேண்டாம்' என்று கூறிவிட்டார்.

ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் சி த்தராமையா முட்டுக்கட்டை போடுகிறார். மாநில அரசின் இத்தகைய அலட்சியத்தால், முக்கியமான ரயில்வே திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாண்டியா ரயில் நிலைய மேம்பாட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல், ரயில் நிலைய பணிகள் மேற்கொள்ளப்படும். ரயில் நிலையத்தில் இருந்து, மாண்டியா நகரின் பல்வேறு இடங்களுக்கு பயணிக்க பஸ் வசதி செய்யப்படும்.

மைசூரு - பெங்களூரு ரயில் பாதையில், பயணியர் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், என் கவனத்துக்கும் வந்துள்ளன. இது தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாண்டியா பகுதியின் மேம்பாடு குறித்து, நானும், மத்திய அமைச்சர் குமாரசாமியும் ஆலோசனை நடத்தினோம். நாங்கள் இருவரும் சேர்ந்து, ரயில்வே திட்டங்களை ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்துவோம்.

இவ்வாறு கூறினார்.

Advertisement